வாண்டுகளுடன் நபிகளார் – தொடர் 01

ஸைது இப்னு ஹாரிஸா – அன்புக்கு நான் அடிமை

ஸைது இப்னு ஹாரிஸா (ரலி) மக்காவின் உக்காழ் சந்தையில் அடிமையாக விற்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது சுமார் எட்டு. ஒரு சிறுவர். அவரை விலைக்கு வாங்கியவர் ஹிஸாம் இப்னு ஹகீம். இவர் நம்முடைய தாய் கதீஜா (ரலி) அவர்களின் நெருங்கிய சொந்தம். இவரின் அன்பளிப்பாக கதீஜாவின் வீட்டுக்கு வந்தார் ஸைது. கதீஜா தம்முடைய அன்பளிப்பாகத் தம் கணவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அடிமையாக ஸைதை வழங்கினார். இது நபித்துவத்திற்கு முன்பே, அதாவது நபியவர்கள் நபியாக்கப்பட்ட நாற்பதாவது வயதுக்கு முன்பே நடந்த சம்பவம்.

ஸைது அடிமையாகச் சந்தையில் விலைக்கு வந்தது ஒரு சோகக் கதை. பிறப்பால் அவர் சுதந்திரமான பிள்ளை. ஹாரிஸாவின் மகன். (ஸைது இப்னு ஹாரிஸா என்றால் ஹாரிஸாவின் மகன் ஸைது என்று அர்த்தம்.) ஸைதின் தாய் சுஃதா தம் சொந்தங்களைச் சந்தித்து வர விரும்பி, கணவர் ஹாரிஸாவிடம் உதவி கேட்டார். ஹாரிஸாவும் தம் மனைவியையும் அன்பு மகன் ஸைதையும் பத்திரமாகக் கொண்டுபோய் தம் மாமியார் வீட்டில் விட்டு வந்தார். இருவருக்குமே மக்கா சொந்த ஊர் அல்ல. சொல்லிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் வெளியூர்களில்.

மஅன், பனூ அல்ஃகைன் என இரண்டு கோத்திரங்கள் இருந்தன. இரண்டுக்கும் பகை இருந்த நேரம் அது. ஸைதின் தாய் சுஃதா, மஅன் கோத்திரம். அவர் போன சமயம், பனூ அல்ஃகைன் கோத்திரம் மஅன் கூட்டத்தைத் தாக்கி கொள்ளை அடித்தது. அறபுக் கோத்திரங்களுக்குள் இந்தச் சண்டைகள் சகஜமானவையே. பனூ அல்ஃகைன் கொள்ளையர்கள் ஸைதைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். போனவர்கள் மக்கா சந்தையில் விற்பனையும் செய்துவிட்டார்கள். உக்காழ் சந்தை மக்காவின் பிரபலமான சந்தை. ஆடு, மாடுகள் போல மனிதர்களும் அடிமைகளாக விற்கப்பட்ட சந்தை.

தாய் சுஃதா ஸைது கடத்தப்பட்டதைக் கணவரிடம் தெரியப்படுத்தியபோது, அருமை மகனைத் தேடி அலைய ஆரம்பித்தார் ஹாரிஸா. துக்கம் தொண்டையை அடைத்தது; கண்ணீர் சிந்தினார்; துயரக் கவிதை பாடினார். அவருக்குத் தெரியாது தம் மகன் சந்தையில் அடிமையாக விற்பனையாகி, ஹகீம் இப்னு ஹிஷாம் வழியாக கதீஜாவுக்கு அன்பளிப்பாகச் சென்று, பின்னர் முஹம்மது (ஸல்) அவர்களின் பொறுப்பில் இருக்கிறார் என்பது. காலங்கள் கடந்தன. மக்காவுக்கு ஹஜ்ஜு யாத்திரை வந்த ஹாரிஸாவின் கூட்டத்தவரில் சிலர், ஸைதை மக்காவில் பார்த்துவிட்டார்கள். விவரம் கேட்டார்கள்.

ஸைது தனக்கு நடந்ததைச் சொல்லிவிட்டு, பெருந்தன்மையும் உயர்ந்த குணமும்கொண்ட ஒருவரின் வீட்டில் நலமாக இருப்பதைத் தன் தந்தைக்குத் தெரியப்படுத்திவிடுமாறு சொல்லி அனுப்பினார்.
செய்தி ஹாரிஸாவுக்குப் போனது. ஓடோடி வந்தார். மகனையும் கண்டார். இருவரும் ஆரத்தழுவிப் பாசத்தைப் பொழிந்து கண்ணீர் சிந்தினார்கள். ஹாரிஸா தம் மகனைக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்தவர். பறிக்கப்பட்ட பாசப் பொருள் திரும்பவும் பத்திரமாக, நல்ல நிலையில் கிடைத்திருப்பது அவருக்குப் பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது. அதற்காக அப்படியே விட்டுவிட்டு வெறுங்கையோடு திரும்புவாரா என்ன?

முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் மகனை என்னுடன் அனுப்பிவிடுங்கள்; அதற்குரிய பணத்தைக் கொடுக்கிறேன்’ என்றார். நபியவர்களோ, ‘உங்கள் மகன் உங்களுடன் வர விரும்பினால், பணம் எதுவும் தராமலே நீங்கள் அழைத்துப் போகலாம். ஆனால், அவர் வர மறுத்தால், நான் அவரை நிர்ப்பந்தித்து தள்ள முடியாது’ என்றார்கள். உடனே ஸைதை அழைத்து, ‘உன் விருப்பம்’ என்றும் சொல்லிவிட்டார்கள். ஸைது, ‘நான் உங்களுடனே இருக்க விரும்புகிறேன்’ என்றார் நபியவர்களைப் பார்த்து. இதென்ன அதிசயம், பெற்றெடுத்த தந்தையுடன் சுதந்திரமாக வாழ்வதை விட்டு அடிமை வாழ்வை யாராவது தேர்ந்தெடுப்பாரா என்று ஆச்சரியப்பட்டார் ஹாரிஸா.

அவருக்குப் புரிந்துவிட்டது, மிகச் சிறந்த பண்பாளர் ஒருவரிடம்தான் தம்முடைய மகன் வளர்ந்துகொண்டிருக்கிறார். நபியவர்களின் உயர்ந்த குணங்கள் மக்கா நகரில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். ஹாரிஸாவும் அதை உணர்ந்து, தமது சந்தோசத்தைவிட தம் பிள்ளையின் சந்தோசம்தான் முக்கியம் என்று முடிவெடுத்தார். ஸைதும் தம் தாய் தந்தையைப் பார்க்க நினைத்தால், போகாமல் இருக்கப் போவதில்லை. அவரின் சந்தோசத்தை நபியவர்களும் தடுக்கப் போவதில்லை. ஸைதைப் பறிகொடுத்து நீண்ட காலம் அலைந்து திரிந்து அழுது தவித்த ஹாரிஸா, இப்போதும் அவரை விட்டுவிட்டுத்தான் கிளம்பிப் போனார். ஆனால், மனம் குளிர்ந்து மகிழ்ச்சியோடு புறப்பட்டார்.

ஸைது இப்படித் தனது தந்தையைத் திருப்பி அனுப்பியதைக் கண்டு நபியவர்கள் நெகிழ்ந்து போனார்கள். ஸைது இனி அடிமை அல்ல. அவரை விடுதலை செய்து தன்னுடைய மகனாகத் தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார்கள். ஸைது இப்னு ஹாரிஸா எனும் பெயர் ஸைது இப்னு முஹம்மது என்றானது. மக்களும் அப்படியே கூப்பிடத் தொடங்கினார்கள். ஸைது அன்று முதல் அவரின் கடைசி மூச்சு வரை நபியவர்களின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தார். அதாவது, நபியவர்கள் நபியாவதற்கு முன்பு மக்கா வந்தவர், நபியவர்கள் மக்காவை விட்டு ஹிஜ்றத் செய்து மதீனா சென்ற பிறகு அங்கும் வந்து சேர்ந்தார்.

ஆரம்பத்திலேயே முஸ்லிமானவர். ஹிஜ்றத் செய்த முஹாஜிரானவர். பத்ரு போரில் கலந்துகொண்டு எதிரிகள்மீது வாளை வீசிய முஜாஹிதானவர். முக்கியமாக ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நபியவர்கள் இறப்பதற்கு முன்பே ஹிஜ்ரீ எட்டு, ஜுமாதா அல்அவ்வல் மாதத்தில் ரோமானியர்களுக்கு எதிரான முஃதா போரில் ஒரு தளபதியாக வீரமரணம் அடைந்தவர். அல்லாஹ் அவர்களுக்கு ஷஹீது அந்தஸ்தை வழங்குவானாக. இந்தப் போருக்கு முன்பும் நபியவர்கள் ஸைதைப் படைத்தளபதியாக அனுப்பி வைக்கிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அடிமைச் சிறுவன் பெரும் படைகளின் தளபதியாக வளர்த்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக் கதை ஸைதுடையது.

ஒரு நபித்தோழரின் பெயர் குர்ஆனில் நேரடியாக அல்லாஹ்வின் வார்த்தையாக இறக்கப்பட்டிருக்கிறது எனில், அது ஸைது மட்டும்தான். தத்தெடுப்பதின் மூலம் மற்றவர்களின் குழந்தைகளை யாரும் சொந்தக் குழந்தையாக உரிமை கொண்டாட அனுமதியில்லை. தந்தையை மாற்றிக்கொள்வது கூடாது என்ற சட்டத்தை அல்லாஹ் இறக்கிய பின்னால், ஸைது இனி முஹம்மதின் மகன் அல்ல, ஹாரிஸாவின் மகன்தான் என்று பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையான அன்புக்குப் பொய்யான உறவுமுறை அவசியப்படவில்லை. பெயரில் இருந்த உறவு அறுந்த பின்பும், ஸைதுக்கும் நபியவர்களுக்கும் இடையே இருந்த இஸ்லாமியப் பந்தம் இன்னும் இன்னும் அன்பை அதிகரிக்க வைத்தது. முஃதா போரில் ஸைதை இழந்த சமயம், நபியவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள். அது ஒரு தந்தையின் அழுகையைவிட உருக்கமாக இருந்ததை அங்கிருந்தவர்கள் உணர்ந்தார்கள்.

உண்மையில் தந்தையின் எல்லாக் கடமைகளையும் நபியவர்கள் ஸைதுக்குச் செய்தார்கள். பருவமடைந்த மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிற தந்தையாக, உம்மு அய்மனைத் திருமணம் செய்துவைத்தார்கள். அந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த போது தம்முடைய மாமி மகள் ஸைனபைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். கருப்பராக, குள்ளராக, சப்பை மூக்குக்காரராக, அடிமை என்று அறபுலகம் பார்த்து வந்த ஸைதைத் தன்னுடைய குறைஷிக் கோத்திரத்தில், தனது குடும்பத்தில், பேரழகு கொண்டு தலைவியாக இருந்த ஸைனபின் கணவராக ஆக்கினார்கள். அந்தத் திருமணமும் பின்னர் விவாகரத்தில் முடிந்தது என்றாலும், ஸைதை வழிநடத்துவதில் எந்தத் தந்தையை விடவும் பொறுப்புள்ள நேசராக இருந்தார்கள். இது எந்தளவுக்குப் போனதென்றால், ஸைதின் மகன் உஸாமாவையும் இதுபோலவே நேசித்தார்கள். உஸாமா இப்னு ஸைது (ரலி) அவர்களும் நபியவர்களின் பிரியமான குழந்தைத் தோழராக வளர்ந்து வந்தார்கள்.

தன்னைப் பெற்றெடுத்த தந்தை ஹாரிஸாவிடம் ஸைது போக மறுத்த அந்தத் தருணம் எப்பேர்ப்பட்ட வரலாற்றை உருவாக்கிவிட்டது பார்த்தீர்களா? பாசக்கார வரலாறு; புரட்சிகர வரலாறு; வீரம் செறிந்த வரலாறு. நபிகளாரை நேசித்த குழந்தைகள் ஒவ்வொருவரும் அதற்குப் பின் எல்லோராலும் நேசிக்கப்பட்ட ஆளுமைகளாக மாறிவிட்டார்கள்.

(வாண்டுகளுடன் நபிகளார் தொடர்வார்கள்)

1 thought on “வாண்டுகளுடன் நபிகளார் – தொடர் 01”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart